வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.1 லட்சம் மின்சார கட்டணம் செலுத்தியவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது.
புதுடெல்லி,
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவங்களை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் வருமான வரித்துறை வெளியிடுவது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக, கடந்த 3-ந் தேதி, 2020-2021 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
அவற்றில் ஒன்று ஐ.டி.ஆர்.-1 சஹாஜ் படிவம். ரூ.50 லட்சம்வரை ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் இதில் கணக்கு தாக்கல் செய்யலாம். மற்றொன்று, ஐ.டி.ஆர்.-4 சுகம் படிவம். இது, தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், ரூ.50 லட்சம்வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் ஆகியோர் பயன்படுத்தக்கூடியது.
அத்துடன், இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் 2 பெரிய மாற்றங்கள் செய்துள்ளதாக வருமான வரித்துறையின் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, 2 அல்லது அதற்கு மேற்பட்டோரை பங்குதாரர்களாக கொண்டு சொந்த வீடு வைத்திருக்கும் தனிநபர்கள் மேற்கண்ட 2 படிவங்களையும் பயன்படுத்த முடியாது. அவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது. உரிய நேரத்தில், அந்த படிவம் வெளியிடப்படும்.
2-வது மாற்றம், ரூ.1 கோடிக்கு மேல் வங்கிக்கணக்கில் போட்டு வைத்திருக்கும் தனிநபர்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவழித்தவர்கள், மின்சார கட்டணம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கட்டியவர்கள் ஆகியோரும் ஐ.டி.ஆர்.-1 படிவத்தை பயன்படுத்த முடியாது.
அறிமுகப்படுத்தப்பட உள்ள தனி படிவத்திலேயே அவர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
Thanks web site
Comments
Post a Comment