வருமான வரி: எதிர்பார்த்த வசூல் இல்லை...
நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் 3 தினங்களே மீதமுள்ள நிலையில், பட்ஜெட் மதிப்பீட்டின்படி வருமான வரி வசூல் இல்லாதது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் கவலையும் எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது.
நடப்பு 2018-19-ம் நிதியாண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி மத்திய நேரடி வரி வசூல் 10.29 ட்ரில்லியன் ரூபாயாக, அதாவது 10.29 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த 2017-18-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான வரித் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 12.5 சதவிகிதம் அதிகம் என்றாலும், 2018-19-ம் நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி 12 லட்சம் கோடி ரூபாய் வசூலாக வேண்டும்.
Sponsored
ஆனால், நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் மார்ச் 27-ம் தேதி வரை 85.1 சதவிகித தொகை மட்டுமே வருமான வரி வசூலாகி உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) கடிதம் எழுதியுள்ளது.
Sponsored
``ஒவ்வொரு தலைமை அலுவலகங்கள் மூலமாகவும் வசூலிக்கப்படும் நிலுவை வரித் தொகை மற்றும் நடப்பாண்டு வர இருக்கும் வரித் தொகை குறித்த மதிப்பீட்டைப் பார்க்கும்போது, வரி வசூல் மோசமான போக்கில் இருப்பதும், வழக்கமான வசூலைவிட 6.9 சதவிகிதம் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
வரி வசூலை அதிகப்படுத்துவதற்கான வியூகங்கள் குறித்து பல்வேறு வழிகளில் உங்களுடன் (வருமான வரித்துறை அதிகாரிகள்) மத்திய நேரடி வரிகள் வாரியம் விவாதித்திருந்தது. அவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருந்தால், வரி வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால், வசூலான வரித் தொகை குறித்த கணக்கு வேறுமாதிரியாக உள்ளது.
எனவே, உடனடி நடவடிக்கையாக, குறிப்பாக பாக்கி வரியை வசூலிப்பதிலும் நடப்பாண்டில் செலுத்தக்கூடிய வரியை வசூலிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி, வசூல் இலக்கை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்" என அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
2019- 20-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், நேரடி வரி வசூல் இலக்கில் 50,000 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் இலக்கை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டு முடிவில், அதாவது மார்ச் 31-ம் தேதி வாக்கில் நேரடி வரி 11.3 லட்சம் கோடி முதல் 11.5 லட்சம் கோடி ரூபாய் வரை வசூலாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment