உங்கள் ஜாதகம் வருமான வரித்துறை கையில்
சம்பளம், டெபாசிட், கடன் உட்பட எல்லாமே விண்ணப்பத்தில் ரெடி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. சம்பளதாரர்கள், ஐடிஆர் 1 படிவம் தாக்கல் செய்ய வேண்டும். தங்கள் சம்பள விவரம் தொடங்கி பிக்சட் டெபாசிட் வட்டி, டிடிஎஸ் விவரங்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு இவ்வளவு சிரமம் இருக்காது. ஏதோ விட்டுப்போய் விட்டதோ என்ற கவலை இருக்காது. முன்கூட்டியே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சரி பார்த்து அனுப்பினால் போதும். இதற்காக ஒரு சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு விட்டது. அந்த சாப்ட்வேர், உங்களது 26ஏஎஸ் படிவத்தில் இருந்து பான் எண் மற்றும் கடந்த ஆண்டு நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தினர் தாக்கல் செய்த டிடிஎஸ் படிவம் ஆகியவற்றில் இருந்து விவரங்களை எடுத்து படிவம் பூர்த்தி செய்யப்படுகிறது.
டிடிஎஸ் தாக்கல் செய்த படிவம் 24கியூவில் இருந்து சம்பள வருவாய், வரி கழிவு விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், டிடிஎஸ் உள்ளிட்டவை பூர்த்திய செய்யப்பட்ட படிவத்தில் இடம்பெற்றிருக்கும்.
பான் எண், பெயர், பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண், இமெயில் முகவரி, மொபைல் எண், வரி செலுத்திய விவரங்கள் டிடிஎஸ் விவரங்கள், சம்பள வருவாய், அலவன்ஸ், கடந்த ஆண்டு சமர்ப்பித்த வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் உள்ள சொத்து விவரங்கள், வங்கி கணக்கில் இருந்து நிரந்தர வைப்பு நிதியில் கிடைத்த வட்டி, வங்கி கணக்குகள் விவரம் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் இருக்கும். இந்த படிவத்தில் உள்ள விவரங்களில் மாற்றம் எதுவும் இருப்பின் சரி செய்து கொள்ளலாம். எனவே, படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சரிபார்த்து வேண்டிய மாற்றங்களை செய்த பிறகு வருமான வரி இணையதளத்தில் படிவத்தை பதிவேற்றம் செய்யலாம். ஐடிஆர் 1 படிவம் தாக்கல் செய்ய தகுதி உடையவர்களுக்கு மட்டுமே முன்கூட்டியே பூர்த்தி செய்யப்பட்ட படிவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment