ஆதார் - பான் இணைக்க வரும் 30ம் தேதி கடைசி
புதுடெல்லி: ஆதாரையும் பான் எண்ணையம் இணைக்க கெடு, வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. நிதி மசோதா திருத்தங்களின்படி, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. கடைசியாக, நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பான் - ஆதார் இணைப்பு அவகாசம் செப்டம்பர் 30 வரை வழங்கப்பட்டது. இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. கெடு முடிய சில நாட்களே உள்ளன. ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண்ணை பயன்படுத்த முடியாது. எனவே, அக்டோபர் 1 முதல் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இயலாமல் போகலாம். ஆனால், இதுகுறித்த அறிவிப்பு அல்லது வரையறை எதுவும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. இணைப்பது எப்படி?: வருமான வரி இணையதளத்தில் இடதுபுறம். 'Quick Links' என்பதை கிளிக் செய்து, 'Link Aadhaar' என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் பான் எண், ஆதார் எண், பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்த பிறகு ஒரு முறை பாஸ்வேர்டு மொபைல் எண்ணுக்கு வரும். அதை உள்ளீடு செய்து பான் - ஆதார் இணைக்கலாம். இதையடுத்து, உங்கள் பான், ஆதார் எண்களில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்யும். ஒரு வேளை, பான் மற்றும் ஆதார் எண்களில் உள்ள பெயர் வேறுபட்டிருந்தால் இணைக்க முடியாது. பான் அல்லது ஆதார் எண்ணில் பெயரை ஒரே மாதிரியாக திருத்திய பிறகு இணைத்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment